திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மூதூரில்
கட்டைபறிச்சானில் உள்ள கணேசபுரம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள
குன்றுதான் கச்சக்கொடி மலை.
மூதூர் நகருக்கு அருகாமையில் உள்ள “ராஜவந்தான்
மலை(மூன்றாம் கட்டை மலை) தொடக்கம் இளக்கந்தை என்ற ஊர் வரை நீளும் “படைகுமித்த கல்” குன்று வரையிலான
குன்றுத்தொடர்களில் உயரமான குன்று இதுதான். இங்கு காணப்படும் கல்வெட்டு இலங்கையில் தமிழரின் பண்டைய இருப்பையும் அவர்களது வியாபார
நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.
இந்த கல்வெட்டை படி எடுத்த பேராசியர் க. இந்திரபாலா அவர்கள் இதில்
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
என்ற எழுத்துக்கள் இருப்பததாக கண்டு பிடித்தார்
கச்சக்கொடி மலை |
முதலில் இது எந்த மொழிக்கு உரியவர்களின்
எழுத்துக்கள் என்பதை ஆராய முற்படும் போது. இலங்கையில் காணப்படும் பல கல்வெட்டுக்கள்
பல வியாபார குறிப்புகள் ஆகவும்,சமயம் சார்ந்த குறிப்புக்களாகவும்
காணப்படுகின்றன.இதில் வியாபர குறிப்புக்கள் பிராகிருத மற்றும் தமிழ் பிராமிகளின்
கலப்பு கொண்ட கல்வெட்டுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதற்க்கு ஒரு காரணமும்
உள்ளது. அக்கால இலங்கை இந்திய வியாபார ஆவணப்படுத்தல்களுக்கு பிராகிருதம் என்ற
எழுத்து வடிவம் ஒரு பொதுவான வடிவமாக காணப்பட்டது.பிராகிருதம் என்பது தமிழ் பிராமி
எழுத்து வடிவத்தில் இருந்து ஆரிய மொழி எழுத்து வடிவத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
எழுத்து வரி வடிவம்(கொச்சை தமிழ் பிராமி) இதை திராவிடர்களும் ஆரியர்களும் விளங்கி
கொள்ள கூடியதாக இருந்தபடியால் பிராகிருதம் வியாபார ஆவணப்படுத்தல் மொழியாக பயன்பட்டு
வந்திருக்கிறது.இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தற்போது ஆங்கிலம் வியாபார
குறியீடாக காணப்படுவது போல தமிழ் கலந்த பிராகிருதம் தென்னாசிய வர்த்தகத்தில் காணப்பட்டு
இருக்கிறது.
இதற்க்கு ஆதாரங்களாக தென்னாசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட
தமிழ் கலந்த பிராகிருத கல்வெட்டுக்களும் தமிழ் நாணயங்களும் சான்று.
தமிழ் வியாபாரிகள் தங்களுடைய வியாபர
குறிப்புக்களை கூடுதலான தமிழ் பிராமி எழுத்துக்களுடன் பிராகிதத்துடன் கலந்து ஆவணப்படுத்தி
உள்ளனர் அப்படி பிராகித மொழி காணப்பட்டாலும் அது தமிழ் பிராமிக்கு உரிய சாயலில்
காணப்படும்..
அவ்வாறான குறிப்புத்தான் இந்த மலையில் உள்ள
கல்வெட்டு. இந்த குறிப்புகளில் முற்று முழுதாக தமிழ் மொழியிலேயே தனது விளக்கத்தை
வெளிப்படுத்துகிறது. ஆனாலும் இவை தமிழ் கலந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்டு
உள்ளது.
இதில் வரும் “ம” என்ற எழுத்து முற்று முழுதாக தமிழ் பிராமிக்கு உரிய
எழுத்து இலங்கையில் உள்ள அனேகமாக உள்ள கல்வெட்டுக்களில் இந்த தமிழ் பிராமிக்குரிய
“ம” காணப்படுகிறது.அது மட்டும் அல்லதாது இதில்
காணப்படும் “க” “ச” “ப” “ய” ஆகிய எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டு பிடிக்கபட்ட கல்
வெட்டுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த கல்வெட்டில் காணப்படும் சொற்களை ஒவ்வொன்றாக
சொற்களை ஆராயும் போது
ப ரு ம க
இது ஒரு
நூற்றுக்கு நூறு தமிழுக்குரிய சொல்(திராவிட சொல்) .இது ஒரு இடுகுறிப் பெயர் சொல்(abstract noun)தமிழக மற்றும் இலங்கை யில்
காணப்படும் கல்வெட்டுகளில் இந்த பட்டப்பெயர் அதிகமாக காணப்படுகிறது.இந்த சொல்
சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் பாளி மொழிக்குரிய தலைவன் என்ற சொல் என்று
கூறப்பட்டாலும் .எந்த பாளி இலக்கியங்களிலும் பருமக என்ற சொல் இடம் பெறவில்லை.
அதே வேளை
பருமக என்பது பருமகன் என்ற சொல்லாகும் பிராகிருதம் கலந்த தமிழ் பிராமிக்
கல்வெட்டுகளில் “ன்” என்ற
எழுத்து பயன் படுத்த பாடமையின் காரணமாக பருமகன் பருமக யாக காணப்படுகிறது. இந்த பரு
மகன் என்ற சொல் பெருமகன் என்ற சொல்லின் மறு வடிவம் ,பெரு மகன் என்பது தலைவனை
குறிக்கும் சொல் அரசனாகவும் வியாபார தலைவனாகவும் இதன் அர்த்தத்தை நாம்
எடுத்துக்கொள்ளலாம்.(ஆதாரம் –இலங்கையில் தமிழும் தமிழர்களும்)
திச (திசன்)
இது ஒரு
தமிழ் சிறப்புப்பெயர் சொல் (proper noun) .இது ஒரு நபருடைய பெயரை குறிப்பிடுகிறது. திச என்பது ஒரு
தமிழ் பெயர் சொல் ஆகும்.இதற்க்கு தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல சான்றுகள்
உள்ளன. தமிழ் நாட்டில் ,அழகன் குளத்தில் உள்ள ஒரு ஊரில் கிடைத்த பண்டைய
மட்பாண்டத்தில் திச என்ற பெயர் காணப்படுகிறது. இலங்கையில் அம்பாறை மாவட்டம்
குடிவில் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தீகவாவியில் இரண்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்த திச என்ற தமிழர் பெயர் காணப்படுகிறது அது மட்டும் அல்லாது
அவர் தமிழர் என்ற ஆதாரத்துக்கான குறிப்புக்களும் காணப்படுகிறது. அனுராத புரத்தில்
காணப்படும் கல்வெட்டு ஒன்றில் திச என்ற தமிழ் வியாபாரியும் அவரது கூட்டத்தாரும்
ஒன்று கூடி வணிகம் நடத்த ஒரு மண்டபத்தை அமைத்தாக கூறப்பட்டுள்ளது.பருமக என்ற
சொல்லில் “ன்”
விடுபட்டது போல இதிலும் “ன்” என்ற எழுத்து விடுபட்டுள்ளது.அப்படியானால் இது திசன் என்ற
சொல்லாக காணப்படுகிறது.
புத(பூதன்)
புத(பூதன்)
என்ற சொல் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இது ஒரு
சிறப்புப்பெயர் சொல்லாக (proper noun) காணப்படுகிறது. அதாவது இது ஒரு நபருடைய பெயர் இப்பெயர்கள் கி.பி இரண்டாம்
நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம்.
அனுராத புரத்தில் புத என்ற சொல்லின் பெண்பால் சொற்கலான பூதி ,சிவ்பூதி,சமணபூதி
என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்லாது அங்கு கிடைத்த ஒரு கல் வெட்டில்
வெள்பூத(வேல் பூதன்) என்ற ஆண் பால் பெயரும் காணப்படுகிறது.அது மட்டும் அல்லாது
தமிழர்களின் இருப்பை வெளிப்படுத்தும் சங்க இலக்கியங்களில் புத என்ற சொல்லுடன்
தொடர்புடைய பெயர்கள் காணப்படுகிறது.உதாரணமாக பூதனார்,வெண்பூதன் ,பூதப்பாண்டியன்
போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.அது மட்டும் அல்லாது இப்பெயர் யாழ்ப்பான காலம் வரை
புழக்கத்தில் இருந்தது.(ஆதாரம் -சங்க கால இலக்கியங்கள்)
அதுமட்டும் அல்லாது இது பொதுப்பெயராகவும்(common noun), காணப்படுகிறது.அதாவது புத்திரன்
அல்லது புதல்வன் என்ற அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.(ஆதாரம்-
பரண விதான நூல்கள்)
லேனே
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது .ஒன்று இது ஒரு
பொதுப்பெயராக(common noun), இடைச்சொல்லாகவும்,வினைசொல்லாகவும்
(verb)காணப்படுகிறது. லேனே என்ற
சொல்லை பெயர் சொல்லாக பார்க்கும்மிடத்து
ஒரு இடத்தை குறிப்பதாக இருக்கிறது அதாவது ஒரு நிலையம் ஒன்று கூடும் இடம்
,வேலைக்க்களம்,பள்ளிக்கூடம் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
இதனை
வினைச்சொல்லாக பார்க்கும் மிடத்து செய்தான் நிறுவினான்.இருந்தான் என்ற அர்த்தங்களை
கொண்டதாக காணப்படுகிறது.
இதனை
இடைசொல்லாக பார்க்கும் போது “ஆல்” (உதாரணம் அவ”னால்”)என்ற
அர்த்தத்தை கொண்டதாக காணப்படுகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)
சகச
இந்த சொல்
எல்லோரும் ,எல்லாவற்றுக்கும், என்ற அர்த்தங்களை கொண்டது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி
ஆய்வு மையம், சென்னை)
சங்கமய
இந்த சொல்
இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.கூட்டுப்பெயராகவும்,வினைச்சொல்லாகவும்
காணப்படுகிறது.இந்த சொல்லை கூட்டுப்பெயராக பார்க்கும் மிடத்து சங்கம் என்ற பொருளை
தருகிறது அதாவது மனிதர் கூட்டம்.
வினைச்சொல்லாக
பார்க்கும்மிடத்து ,அமைத்தல் என்ற பொருளை தருகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி
ஆய்வு மையம், சென்னை)
இந்த
கல்வெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது? யாருக்குரியது?
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
பெருமகன் திசன் புத்திரன் ஆல் எல்லாவற்றுக்கும் அமைக்கபட்டது
இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதி தமிழகத்திலும் இலங்கையிலும் வியாபாரம் புரட்சி
ஏற்றபட்ட காலம்.இலங்கை துறைமுகங்கள் அதனை அண்டிய பகுதிகளும் வணிகர்களின்
தங்குமிடங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும்,அவர்களுக்குரிய வழிபாட்டு தளங்களாலும்
காணப்பட்டு இருக்கிறது.கிழக்கு இலங்கையில் இலங்கைத்துறை முகத்துவாரமும் ஒரு பண்டைய
வணிக மையம் ஆகும்.
அது மட்டும் அல்லாது திரியாய் வரை வணிகர்களின் போக்குவரத்தும் செயல்பாடுகளும்
அமைத்திருக்கிறது என்பதற்கு திரியாய் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.இலங்கை
துறை முகத்துவாரத்தில் இருந்து திரியாய் செல்வதற்கு கொட்டியார பகுதியைத்தான்
வியாபாரிகள் கடந்து செல்ல வேண்டும்.அவ்வாறு கடந்து செல்லும் பாதையில்தான் இவ்
மலைக்குன்றுகள் காணப்படுகின்றன.இம் மலைகள் அவர்களுக்கு பாதுகாப்பு அரனாகவும்
தங்குவதற்கு இசைவான இயற்கை குகைகளும் காணப்படுவதால் அவர்கள் இம்மலையை
தங்குமிடமாகவும் சந்திப்பு நிலையங்களாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அதுமட்டும்
அல்லாது இம்மலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட உரல்,பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட
குழிகள்,சுடு மண் கற்கள்(பண்டைய கட்டிட எச்சங்கள்) என்பன மனிதர் தங்கிய இடம் என்பதை உறுதி
செய்கின்றன.
எனவே இம்மலை கல்வெட்டுக்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்
வியாபாரிகளின் தங்குமிடம் அல்லது
சந்திக்கும் இடம் பற்றிய குறிப்புகள்
ஆகும்.
இம்மலையை பயன் படுத்திய வியாபார தலைவனால் இங்கு எதோ அமைக்கப்பட்டு இருக்கிறது
எக்காலத்துகுரியது?
.இந்த கல்வெட்டுக்களில் காணப்படும் திசன் ,பூதன் ஆகிய பெயர்கள் இரண்டாம்
நூற்றாண்டுக்கு உரியது என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளன ,புத சொல்பெயர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில்
காணப்பட்ட பூத வழிபாட்டின் அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.
பூதன் என்ற பெயர் சங்க
காலத்துக்குரிய பெயர் ,கி.பி இரண்டாம் நூற்றாண்டு கூட சங்க காலக்காலம் . இலங்கையில்
அனுராத புரத்திலும்,அம்பாறையிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுக்குரிய
கல்வெட்டுக்கள் திசன் என்ற இரு தமிழர்களை பற்றியதாக உள்ளது.அதுமட்டும்
அல்லாது இதை படி எடுத்த இந்திர பாலா அவர்கள் இதை இரண்டாம் நூற்றாண்டுக்கானது என்று
உறுதி செய்துள்ளார்.
.
இவ்வாறு திருகோணமலையின் பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றை பறைசாற்றி நிமிர்ந்து
நிற்கிறது இக்குன்று!!