Showing posts with label வியாபாரம். Show all posts
Showing posts with label வியாபாரம். Show all posts

Wednesday, August 20, 2014

டியர் #கத்தி #லைக்கா எதிர் போராளிஷ்,



லைக்கா என்ற  வணிகத்தின் நிறுவனர் இலங்கை அரசோட நல்லுறவா இருக்கிறார் /வியாபாரம் செய்றார் எண்டதாலதானே கத்தி படத்த தடை செய்யணும் எண்டு சொல்லுரிங்க.
அப்படி எண்டா நீங்க நிறைய படத்த எதிர்த்து இருக்கணும் இன்னும் எதிர்க்கணும்,நீங்க நிறைய பொருட்கள பயன் படுத்தவே கூடாது.
நீங்க பயன்படுத்திற பாதி பொருட்களின் உற்பத்தியாளர்கள் இலங்கையில நேரடியாக கூட்டுமுயற்சியாளர்களாகவும், நிதி மற்றும் தொழில்நுட்ப பங்காளர்களாக இருக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா?
இலங்கையில தொழில் செய்ற இந்திய கூட்டு இணைப்பு நிறுவங்கள்

1.ஐ ஓ சி
போன வருசம் இலங்கையில இருக்கிற தமிழ் சிங்கள மக்களிட்ட தங்களுடைய உற்பத்திய விற்று இலங்கை ரூபா 51.75 மில்லியன் வரிக்கு பிந்திய லாபம் உழைச்சு இருக்குது.

2.எயார்டேல்
2௦௦ அமெரிக்க டொலர் முதலீடு செய்து இருக்கு.அப்ப லாபம் எவ்வளவு இருக்கும்.? 

3.பிரமல் முயற்சியாளர்
இலங்கையில இருக்கிற கண்ணாடி உற்பத்தியில 54 பங்கு இந்த நிறுவனதிட்டதான் இருக்கு 

4.தாஜ் ஹோட்டல்
மூன்று இடத்தில ஹோட்டல் வைச்சு இருக்கிறாங்க 

5.அல்ட்ரா டேக் சிமன்ட்
இந்த நிறுவனத்தோட போன வருச விற்பனைப்புரள்வு 59 மில்லியன் டொலர்
இந்த வருசம் 11௦ மில்லியன் டொலர் எதிர் பார்க்கப்படுதாம்.

6. ஜே வி கோகல்
இலங்கையில இருந்து தேயிலை வாங்கி “super tea” என்ட பெயரில 31 நாட்டுக்கு வியாபாரம் செய்றாங்க.

7.டாட்டா
வாகனம் ,தொலைத்தொடர்பு, கட்டுமானம் ஆகிய மூன்று வியாபாரம் செய்றாங்க, அதுமட்டும்இல்ல EGO அனுமதிப் பத்திரம் குடுத்துத்தான் இலங்கையிலஅவங்கட கம்பனிய கூட்டு இணைச்சு இருக்கிறாங்க.

8.வங்கி
ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா, இந்தியன் வங்கி, ICICI வங்கி,axis வங்கி போன்ற வங்கிகள் நிதி சேவை செய்றாங்க.

9.Asian Paints
2௦௦௦ ம் ஆண்டுக்கு முதல் இருந்தே இங்க வியாபாரம் செய்றாங்க.

10.CEAT
களனி டயர் நிறுவனத்துடன் சேர்ந்து உற்பத்தி செய்து 14 நாடுகளுடன் வியாபாரம் செய்றாங்க.

11.ITC வரையறுத்த கூட்டு நிறுவனம்
இலங்கையில கச்சான் கடலை விக்கிறதில இருந்து எல்லாம் விக்கிறாங்க


12.ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் வரையறுத்த கூட்டு நிறுவனம்
சீனி வியாபாரம் அதுவும் சின்னதா இல்ல 2௦௦ டொலர் முதலிட்டுத் திட்டதில.
இது மட்டும் இல்ல வாகனம், தொலைக்காட்சி ,வான் போக்குவரத்து,கட்டுமானம் ,லொட்டு லொசுக்கு எல்லா வியாபாரமும் நடக்குது.
இலங்கை நிறுவங்களும் அங்க வியாபாரம் செய்றாங்க நீங்க குடிக்கிற லயன் பீர் 22 % இலங்கையின் உற்பத்தி அது உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு? சிலோன் பிஸ்கட்,ஜோன் கீல்ஸ், இப்படி நிறைய நிறுவங்கள்
இப்போ நான் சொன்ன நிறுவங்கள் தொடர்புடைய பங்குதாரர், வழங்குனர் இணை  நிறுவங்கள், துணை நிறுவங்கள், பங்காளி நிறுவனங்கள், எல்லா வற்றையும் பட்டியல் இட்டு விட்டு லைக்காவுடன் சேர்ந்து எதிர்கலாம்தானே!!!!
அப்படி எதிர்த்தல் என்பது நீங்கள் கற்காலத்துக்கு செல்வதற்கு சமம். நீங்கள் பயன்படுத்தும் அநேக பொருட்களை நீங்கள் விட்டு விட வேண்டும் ..இப்போ இருக்கும் வணிக கூட்டு இணைப்புகள் மிகவும் சிக்கல் ஆனவைகள் ஒன்றை நம்பிதான் இன்னும் ஒன்று இருக்கும்  .அது மட்டும் அல்ல  பொருளியல்ல ஒரு தத்துவம் இருக்கு எங்களுடைய தேவை உலகத்தில் உள்ள வளங்களை விட அதிகம்.

Friday, January 4, 2013

திருமலையின் வரலாறு உருவாகிய காலம்



உலக வரலாறுகள் உருவாக்க காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்துக்கு பின் வந்த காலப் பகுதிகளை ஒட்டித்தான் காணப்படுகின்றன.அப்படித்தான் இலங்கை வரலாறும் கி.மு 500 ஆண்டளவில் விஜயன் வருகையோடு தொடங்குகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஆனால் மகாவம்சம் விஜயன் வருகைக்கு முன்னரான திருகோணமலையில்  இறுக்கமான ஒரு ஆட்சி முறை இருந்ததை வெளிப்படையாக சொல்லவிட்டாலும் சில இடங்களில் சொல்லாமலும் இல்லை.
அப்படித்தான் விஜயனது வருகைக்குப் பின்னரான சம்பவம் ஒன்றை கூறும் மகாவம்சம் நம் தேடலை அதிகரித்து சென்று விடுகிறது ,
விஜயன் வருகைக்கு பின்னர் விஜயனுக்கு வாரிசு இல்லாமல் போகவே விஜயன் தனது வாரிசுக்காக கலிங்க நாட்டில் இருந்து தனது தம்பி சுமிதனின் மகனான பாண்டு வாசுதேவனை இலங்கை தீவில் உள்ள தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அழைக்கிறான்.
அப்படி அழைக்கப்பட்ட பாண்டு வாசு தேவனும் அவனுடைய 32 மந்திரிகளும் துறவிகள் வேடம் பூண்டே திருகோணமலை துறை முகத்தை அடைந்ததாக மகாவம்சம் கூறுகிறது .
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
பாண்டு வாசு தேவனும் அவனது மந்திரிகளும் மாறு வேடத்தில் திருகோணமலைக்கு வர காரணம் என்ன ?
அப்படியானால் விஜயனது கூட்டத்திற்கு எதிரானவர்களின் கட்டமைப்பு  திருகோணமலை பகுதியில் இருந்திருக்க வேண்டும்.அதன் காரணமாகவே இக்குழுவினர் மாறுவேடத்தில் வந்திருக்கின்றனர்.இவ் மகாவம்ச குறிப்பில் இருந்து இன்னும் ஒன்று புலப்படுகிறது.இங்கு வாழ்ந்த மக்கள் துறவிகளை மதிக்கத்தக்கவர்களாக வாழ்த்திருகின்றனர்.ஆகவேதான் பாண்டு வாசுதேவன் குழுவினர் துறவி வேடத்தை தேர்ந்து எடுத்திருகின்றனர்.
ஒழுங்கான ஆட்சி முறையுடன் இம் மக்கள் வாழ்தார்கள் என்று நிருபிக்க மகாவம்சத்தில் இன்னுமொரு குறிப்பு காணப்படுகிறது.துட்டகைமுனு எல்லாளன் போரை பற்றி குறிப்பிடும் மகாவம்சம் எல்லாளனை துட்டகைமுனு வெல்வதற்கு முன்பு 32 தமிழ் ஆரசுகளை வென்றதாக கூறுகிறது.
அதுமட்டும் அல்லாது அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த கோகர்ண (திருமலை) துறைமுகப்பகுதியை எந்த ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ஆட்சியாளனும்  ஆண்டதாக குறிப்பிடவில்லை.ஆரிய வம்சத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட நூலில் அடிக்கடி கோகர்ணம்(திருமலை)சவாலுக்குரிய பகுதியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அவர்களின் செல்வாக்கு குறைவான இடம் என்பதை மட்டும் காட்டுகிறது .அப்படியானால் அந்த 32 அரசர்களில் யாரோ ஒருவனால் இப்பகுதி ஆளப்பட்டு இருக்கிறது என்பது சந்தேகமில்லாமல் புலப்படுகிறது.

இவ்வாறு சவாலுக்குரிய பிரதேசமாக இருந்த கோகர்ணம் வழிபாட்டு ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கி. மு 300 ஆண்டு காலப்பகுதியில்தான் இலங்கையில் சைவ மற்றும் பிராமணர்களின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கிய காலம் எனலாம்.இதற்கு முக்கிய காரணம் வியாபார தொடர்புகள்தான்.இதே மாதிரித்தான் சமணமும் தேவாதார மற்றும் மகாயான பௌத்தங்கள் நிறுவன ரீதியாக இலங்கை தீவில் காலடி எடுத்து வைக்கின்றன.
. கி மு 3 நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய மகாசேனன் கோகர்ணம்(திருகோணமலை) ,எரகாவில்லை(ஏறாவூர்),மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகிய வற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக மாகவம்சம் கூறுகிறது. மகாசெனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்கள்தான் இருந்திருக்கின்றன.
இதில் முக்கியமான விடயம்  என்னவேனில் பலமான தென்னிந்திய தொடர்பை திருகோணமலை கொண்டிருந்திருக்கிறது . என் என்றால் இலங்கையில் லிங்க வழிபாடு என்பது ஆதார ரீதியாக இலங்கை ஆதிக்குடிகளிடம் இருக்க வில்லை.கந்த, வேல் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட முருக வழிபாடுதான் இவர்களிடம் இருந்தது.அப்படி காணப்பட்ட திருகோணமலையில் வணிகர்களில் வருகை மூலமே லிங்க வழிபாடு அறிமுகப்படுத்த பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு திருகோணமலையில் லிங்க வழிபாடு ,மற்றும் மகாயான புத்த மதங்கள் போட்டி போட்டு கொள்ள முருக வழிபாடு அழியாமல் தனித்துவமான வழிபாட்டு முறையாக கி பி எழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்ததை சூளவம்சம் சில புனைவுகளுடன் எடுத்துரைக்கிறது.
கி பி எழாம் நூற்றாண்டு காலப்பகுதியில் மானவர்வன் என்ற இளவரசன் கந்தக்கடவுளை நினைத்து வேள்வி செய்ததாகவும் அப்போது கந்த கடவுள் மயில் பறவையில் வந்து காட்சி தந்ததாகவும் பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுப்பிடுகிறது.



Monday, November 5, 2012

சாட்டை சாட்டைதான்


எந்த பாடசாலையும் , ஒரு மாணவனிடம்  உள்ள திறமையை தட்டிவிட்டு தலைநிமிர்த்துவதும் இல்லை, அப்படி தரைமட்டமாக்குவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கையில்தான் உள்ளது... என்ற கருத்தை அரசு பாடசாலையில்  பணிபுரியும் ஆசிரியர்களின் அணுகுமுறைகளை சாட்டையால் அடித்திருப்பதோடு, அதன் அவலநிலையையும் கலந்து எச்சரிக்கைமணியை ஓங்கி அடித்து எங்கள் பார்வைக்கு வந்துதான் சாட்டை.
ஐந்து பாடல்கள்,நான்கு சண்டை காட்சிகள் என மாசலாவை தூறி எமக்கு தரும் தமிழ் திரைத்துறை சில நல்ல படங்களை தராமலும் இருப்பதில்லை.
அவ்வாறன வரிசையில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில்  வந்ததுதான் சாட்டை என்ற கல்வி அரசியலை பேசும் படம். சில வருடங்களுக்கு முன் வந்த `பசங்கஎன்ற படம் பேசப்படாத பாடசாலை மாணவர்கள் பிரச்சனையை மெதுவாக பேசியது அப்படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது.ஆனால் பசங்க படத்தில் பேசாமல் விடப்பட்ட கல்வி அரசியலை இந்தப் படம் காரசாரமாக பேசியிருக்கிறது.
பாடசாலை கல்வியை வியாபாரமாக்கிவிட்ட சூழலில் அரசுப் பள்ளிகளில் இன்று நடக்கும் அவலம் அப்படியே இயக்குனர் அகத்தியனின் பட்டறையிலிருந்து வந்தத  இயக்குனர் அன்பழகனால் தோலுரிக்கப்பட்டுள்ளது
தனது முதல் படத்திலே ஒரு மிக முக்கியமான அரசியலை பேசும் படத்தைச் சமரசங்களின்றி இயக்கியிருக்கும் அன்பழகனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
தூக்கி எறியும் சண்டை காட்சிகளோ நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் சேர்ந்து ஆடும் பாடல் கட்சிகளோ எதுவும் இல்லாத சந்தர்பத்தில் அதிகமான பாடசாலை காட்சிகளில் தன் உச்ச திறமையை காட்டி சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன், பள்ளிக்குள்ளே சுற்றிவருகிற ஒளிப்படக்கருவி எந்த நெருடலும் இல்லாமல் நம்மையும் அங்கு கூட்டிச்சென்று விடுகிறது.
நல்லாசிரியருக்கான அத்தனை தகுதியும் கொண்ட ஆசிரியராகச் தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நன்றாக வாழ்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் கடைசியாக நடித்த ஈசன் பட  காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை போல.. எந்நேரமும் முகத்தை விறைப்பாகவே வைத்திருகிறார்.விறைப்பை கொஞ்சம்  குறைத்திருக்கலாம்.. மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் நடந்துகொள்ளும் விதம், அனைவரும் தன்னைத் தாக்கும்போதும் தன்னுடைய மாணவிக்காக அடிவாங்கிக்கொள்ளும் குணம், எந்த சூழலிலும் மாணவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவது என ஒரு உண்மையான ஆசிரியராக வாழ்ந்திருக்கிறார்.
தம்பி ராமையா.. படத்தின் இன்னுமொரு கதாநாயகன் கதையின் வில்லனாக நக்கலுடன் மிரட்டி இருக்கிறார். வில்லத்தனமான ஆசிரியராக பிரித்து மேய்ந்து விடுகிறார்.
...முடியை ஒதுக்கி விட்டு வழுக்கை தலையில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே ரணகளம் பண்ணியிருக்கிறார். சொல்லப்போனால் படம் விறுவிறுப்பாகப் போவது தம்பி ராமையாவின் சேட்டைகளால் தான்.
படத்தின் சுவாரஸ்யங்கள்...
முதல் காட்சியில் உந்துருளியில் வரும் சமுத்திரகனி நம்மவர் கமலை நினைவு படுத்துகிறார் . முக்கியமாக பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும் காட்சிகளில் நமக்கு பிடித்த ஒரு  ஆசிரியராக நம் கண் முன் நிற்கின்றார்.

வேக வாசிப்பு பயிற்சி , நினைவு அதிகரிக்கும் பயிற்சி, தோப்ப்புக்கரணம் போட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்  என்பது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும்  காட்சிகள் சுவாரஸ்யம்.
முக்கியமாக பெண்கள் கழிவறையை எப்படி இருக்கு என்று எட்டி பார்த்து தண்டனை அனுபவிக்கும்  மாணவனை பாராட்டி பேசும் காட்சிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வெகு நாட்களுக்கு பிறகு ஜுனியர் பாலைய்யா..... பாடசாலை அதிபராக நடித்து இருக்கின்றார்.. அவர் தம்பிராமய்யாவின் அதட்டல் உருட்டலுக்கு  பயப்படும் இடங்களில் கலக்கி இருக்கிறார்.
தம்பிராமய்யா வரும் அனைத்து காட்சிகளும் சுவாரசியம்தான்.
பிளாக் பாண்டி, யுவன், சதிஷ் மகிமா போன்றவர்கள் மாணவர்களுக்கான பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..
இமானின் இசை படத்துக்கு பெரிய பலம்..
பாடசாலை ஆசிரியர்கள் செய்யும் கல்வி அரசியலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இருந்த ஏக்கங்கள் கோபங்கள் அனைத்தையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் பிரமாதம்.. கேவலமான கல்வி அரசியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.ஆனாலும் வீரியம் குறைந்து விடவில்லை.
.அன்பழகன் கூர்மையான வசனங்கள் படத்திற்கு இன்னுமொரு பலம் ஏணியை கூரை மேல போடாதீங்க, வானத்தை நோக்கிப் போடுங்க...என்ற ஒரு வசனமே போதும் இயக்குனரின் தரத்தைச் சொல்ல..
இன்றைய காலத்திற்க்குத் தேவையான கதை, சில அரசுபாடசாலைகளின்  நிலைமை, நல்ல ஆசிரியருக்கான அடையாளம் என்ன? என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளதால் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய, அதே சமயம் பார்க்கவேண்டிய படம்...!
.இந்த படத்தை  மாணவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அனைத்து கட்டாயம் ஆசிரியர்களும், கல்வி வியாபாரிகளும் பார்த்தாக வேண்டும், .


Thursday, September 13, 2012

மூதூர் குன்றுகள் புதையல் பூமியா? பாகம் -2 தமிழரின் இருப்புக்கான ஆதாரங்கள் மூதூரில் !!!

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மூதூரில் கட்டைபறிச்சானில் உள்ள கணேசபுரம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குன்றுதான்  கச்சக்கொடி மலை.

மூதூர் நகருக்கு அருகாமையில் உள்ள “ராஜவந்தான் மலை(மூன்றாம் கட்டை மலை) தொடக்கம் இளக்கந்தை என்ற ஊர் வரை நீளும் “படைகுமித்த கல் குன்று  வரையிலான குன்றுத்தொடர்களில் உயரமான குன்று இதுதான். இங்கு காணப்படும் கல்வெட்டு  இலங்கையில் தமிழரின் பண்டைய  இருப்பையும் அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக  திகழ்கிறது.
இந்த கல்வெட்டை படி எடுத்த பேராசியர் க. இந்திரபாலா  அவர்கள் இதில்
ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
என்ற எழுத்துக்கள் இருப்பததாக கண்டு பிடித்தார்
கச்சக்கொடி மலை
முதலில் இது எந்த மொழிக்கு உரியவர்களின் எழுத்துக்கள் என்பதை ஆராய முற்படும் போது. இலங்கையில் காணப்படும் பல கல்வெட்டுக்கள் பல வியாபார குறிப்புகள் ஆகவும்,சமயம் சார்ந்த குறிப்புக்களாகவும் காணப்படுகின்றன.இதில் வியாபர குறிப்புக்கள் பிராகிருத மற்றும் தமிழ் பிராமிகளின் கலப்பு கொண்ட கல்வெட்டுக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதற்க்கு ஒரு காரணமும் உள்ளது. அக்கால இலங்கை இந்திய வியாபார ஆவணப்படுத்தல்களுக்கு பிராகிருதம் என்ற எழுத்து வடிவம் ஒரு பொதுவான வடிவமாக காணப்பட்டது.பிராகிருதம் என்பது தமிழ் பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து ஆரிய மொழி எழுத்து வடிவத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எழுத்து வரி வடிவம்(கொச்சை தமிழ் பிராமி) இதை திராவிடர்களும் ஆரியர்களும் விளங்கி கொள்ள கூடியதாக இருந்தபடியால் பிராகிருதம் வியாபார ஆவணப்படுத்தல் மொழியாக பயன்பட்டு வந்திருக்கிறது.இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் தற்போது ஆங்கிலம் வியாபார குறியீடாக காணப்படுவது போல தமிழ் கலந்த பிராகிருதம் தென்னாசிய வர்த்தகத்தில் காணப்பட்டு இருக்கிறது.
இதற்க்கு ஆதாரங்களாக தென்னாசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கலந்த பிராகிருத கல்வெட்டுக்களும் தமிழ் நாணயங்களும் சான்று.
தமிழ் வியாபாரிகள் தங்களுடைய வியாபர குறிப்புக்களை கூடுதலான தமிழ் பிராமி எழுத்துக்களுடன் பிராகிதத்துடன் கலந்து ஆவணப்படுத்தி உள்ளனர் அப்படி பிராகித மொழி காணப்பட்டாலும் அது தமிழ் பிராமிக்கு உரிய சாயலில் காணப்படும்..
அவ்வாறான குறிப்புத்தான் இந்த மலையில் உள்ள கல்வெட்டு. இந்த குறிப்புகளில் முற்று முழுதாக தமிழ் மொழியிலேயே தனது விளக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் இவை தமிழ் கலந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
இதில் வரும் “ம என்ற எழுத்து முற்று முழுதாக தமிழ் பிராமிக்கு உரிய எழுத்து இலங்கையில் உள்ள அனேகமாக உள்ள கல்வெட்டுக்களில் இந்த தமிழ் பிராமிக்குரிய “ம காணப்படுகிறது.அது மட்டும் அல்லதாது இதில் காணப்படும் ஆகிய எழுத்துக்கள் தமிழகத்தில் கண்டு பிடிக்கபட்ட கல் வெட்டுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இந்த கல்வெட்டில் காணப்படும் சொற்களை ஒவ்வொன்றாக சொற்களை ஆராயும் போது
ப ரு ம க
இது ஒரு நூற்றுக்கு நூறு தமிழுக்குரிய சொல்(திராவிட சொல்) .இது ஒரு இடுகுறிப் பெயர் சொல்(abstract noun)தமிழக மற்றும் இலங்கை யில் காணப்படும் கல்வெட்டுகளில் இந்த பட்டப்பெயர் அதிகமாக காணப்படுகிறது.இந்த சொல் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் பாளி மொழிக்குரிய தலைவன் என்ற சொல் என்று கூறப்பட்டாலும் .எந்த பாளி இலக்கியங்களிலும் பருமக என்ற சொல் இடம் பெறவில்லை.
அதே வேளை பருமக என்பது பருமகன் என்ற சொல்லாகும் பிராகிருதம் கலந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் “ன் என்ற எழுத்து பயன் படுத்த பாடமையின் காரணமாக பருமகன் பருமக யாக காணப்படுகிறது. இந்த பரு மகன் என்ற சொல் பெருமகன் என்ற சொல்லின் மறு வடிவம் ,பெரு மகன் என்பது தலைவனை குறிக்கும் சொல் அரசனாகவும் வியாபார தலைவனாகவும் இதன் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.(ஆதாரம் –இலங்கையில் தமிழும் தமிழர்களும்)
திச (திசன்)
இது ஒரு தமிழ் சிறப்புப்பெயர் சொல் (proper noun) .இது ஒரு நபருடைய பெயரை குறிப்பிடுகிறது. திச என்பது ஒரு தமிழ் பெயர் சொல் ஆகும்.இதற்க்கு தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ் நாட்டில் ,அழகன் குளத்தில் உள்ள ஒரு ஊரில் கிடைத்த பண்டைய மட்பாண்டத்தில் திச என்ற பெயர் காணப்படுகிறது. இலங்கையில் அம்பாறை மாவட்டம் குடிவில் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தீகவாவியில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திச என்ற தமிழர் பெயர் காணப்படுகிறது அது மட்டும் அல்லாது அவர் தமிழர் என்ற ஆதாரத்துக்கான குறிப்புக்களும் காணப்படுகிறது. அனுராத புரத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் திச என்ற தமிழ் வியாபாரியும் அவரது கூட்டத்தாரும் ஒன்று கூடி வணிகம் நடத்த ஒரு மண்டபத்தை அமைத்தாக கூறப்பட்டுள்ளது.பருமக என்ற சொல்லில் “ன் விடுபட்டது போல இதிலும் “ன் என்ற எழுத்து விடுபட்டுள்ளது.அப்படியானால் இது திசன் என்ற சொல்லாக காணப்படுகிறது.




புத(பூதன்)
புத(பூதன்) என்ற சொல் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இது ஒரு சிறப்புப்பெயர் சொல்லாக (proper noun) காணப்படுகிறது. அதாவது இது ஒரு நபருடைய பெயர் இப்பெயர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம். அனுராத புரத்தில் புத என்ற சொல்லின் பெண்பால் சொற்கலான பூதி ,சிவ்பூதி,சமணபூதி என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அது மட்டும் அல்லாது அங்கு கிடைத்த ஒரு கல் வெட்டில் வெள்பூத(வேல் பூதன்) என்ற ஆண் பால் பெயரும் காணப்படுகிறது.அது மட்டும் அல்லாது தமிழர்களின் இருப்பை வெளிப்படுத்தும் சங்க இலக்கியங்களில் புத என்ற சொல்லுடன் தொடர்புடைய பெயர்கள் காணப்படுகிறது.உதாரணமாக பூதனார்,வெண்பூதன் ,பூதப்பாண்டியன் போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.அது மட்டும் அல்லாது இப்பெயர் யாழ்ப்பான காலம் வரை புழக்கத்தில் இருந்தது.(ஆதாரம் -சங்க கால இலக்கியங்கள்)
அதுமட்டும் அல்லாது இது பொதுப்பெயராகவும்(common noun),  காணப்படுகிறது.அதாவது புத்திரன் அல்லது புதல்வன் என்ற அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.(ஆதாரம்- பரண விதான நூல்கள்)






லேனே
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது .ஒன்று இது ஒரு பொதுப்பெயராக(common noun), இடைச்சொல்லாகவும்,வினைசொல்லாகவும் (verb)காணப்படுகிறது. லேனே என்ற சொல்லை பெயர் சொல்லாக பார்க்கும்மிடத்து  ஒரு இடத்தை குறிப்பதாக இருக்கிறது அதாவது ஒரு நிலையம் ஒன்று கூடும் இடம் ,வேலைக்க்களம்,பள்ளிக்கூடம் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
இதனை வினைச்சொல்லாக பார்க்கும் மிடத்து செய்தான் நிறுவினான்.இருந்தான் என்ற அர்த்தங்களை கொண்டதாக காணப்படுகிறது.
இதனை இடைசொல்லாக பார்க்கும் போது “ஆல் (உதாரணம் அவனால்)என்ற அர்த்தத்தை கொண்டதாக காணப்படுகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


சகச
இந்த சொல் எல்லோரும் ,எல்லாவற்றுக்கும், என்ற அர்த்தங்களை கொண்டது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)

சங்கமய
இந்த சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டு காணப்படுகிறது.கூட்டுப்பெயராகவும்,வினைச்சொல்லாகவும் காணப்படுகிறது.இந்த சொல்லை கூட்டுப்பெயராக பார்க்கும் மிடத்து சங்கம் என்ற பொருளை தருகிறது அதாவது மனிதர் கூட்டம்.
வினைச்சொல்லாக பார்க்கும்மிடத்து ,அமைத்தல் என்ற பொருளை தருகிறது (உதவி–அரங்கராஜ்,செம்மொழி ஆய்வு மையம், சென்னை)


இந்த கல்வெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது? யாருக்குரியது?

ப ரு ம க தி ச பு த லெனே
சகச சங்கமய
பெருமகன் திசன் புத்திரன் ஆல் எல்லாவற்றுக்கும் அமைக்கபட்டது

இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதி தமிழகத்திலும் இலங்கையிலும் வியாபாரம் புரட்சி ஏற்றபட்ட காலம்.இலங்கை துறைமுகங்கள் அதனை அண்டிய பகுதிகளும் வணிகர்களின் தங்குமிடங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும்,அவர்களுக்குரிய வழிபாட்டு தளங்களாலும் காணப்பட்டு இருக்கிறது.கிழக்கு இலங்கையில் இலங்கைத்துறை முகத்துவாரமும் ஒரு பண்டைய வணிக மையம் ஆகும்.
அது மட்டும் அல்லாது திரியாய் வரை வணிகர்களின் போக்குவரத்தும் செயல்பாடுகளும் அமைத்திருக்கிறது என்பதற்கு திரியாய் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன.இலங்கை துறை முகத்துவாரத்தில் இருந்து திரியாய் செல்வதற்கு கொட்டியார பகுதியைத்தான் வியாபாரிகள் கடந்து செல்ல வேண்டும்.அவ்வாறு கடந்து செல்லும் பாதையில்தான் இவ் மலைக்குன்றுகள் காணப்படுகின்றன.இம் மலைகள் அவர்களுக்கு பாதுகாப்பு அரனாகவும் தங்குவதற்கு இசைவான இயற்கை குகைகளும் காணப்படுவதால் அவர்கள் இம்மலையை தங்குமிடமாகவும் சந்திப்பு நிலையங்களாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.அதுமட்டும் அல்லாது இம்மலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட உரல்,பாறைகளில் ஏற்படுத்தப்பட்ட குழிகள்,சுடு மண் கற்கள்(பண்டைய கட்டிட எச்சங்கள்)  என்பன மனிதர் தங்கிய இடம் என்பதை உறுதி செய்கின்றன.


எனவே இம்மலை கல்வெட்டுக்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வியாபாரிகளின்  தங்குமிடம் அல்லது சந்திக்கும் இடம்  பற்றிய குறிப்புகள் ஆகும்.
இம்மலையை பயன் படுத்திய வியாபார தலைவனால் இங்கு எதோ அமைக்கப்பட்டு இருக்கிறது
எக்காலத்துகுரியது?
.இந்த கல்வெட்டுக்களில் காணப்படும் திசன் ,பூதன் ஆகிய பெயர்கள் இரண்டாம் நூற்றாண்டுக்கு உரியது என்பதை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளன ,புத சொல்பெயர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதில் காணப்பட்ட பூத வழிபாட்டின் அடிப்படையாக கொண்டு காணப்படுகிறது.
பூதன் என்ற பெயர் சங்க காலத்துக்குரிய பெயர் ,கி.பி இரண்டாம் நூற்றாண்டு கூட சங்க காலக்காலம் . இலங்கையில் அனுராத புரத்திலும்,அம்பாறையிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்கள் திசன் என்ற இரு தமிழர்களை பற்றியதாக உள்ளது.அதுமட்டும் அல்லாது இதை படி எடுத்த இந்திர பாலா அவர்கள் இதை இரண்டாம் நூற்றாண்டுக்கானது என்று உறுதி செய்துள்ளார்.
.
இவ்வாறு திருகோணமலையின் பண்டைய தமிழ் மக்களின் வரலாற்றை பறைசாற்றி நிமிர்ந்து நிற்கிறது இக்குன்று!!