Friday, January 18, 2013

திருகோணமலையின் வரலாற்றையும் ஈழத்தில் சோழர்களின் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்த வரலாற்றியலாளர் திரு.நா.தம்பிராசா

நன்றி- சத்தியதேவன்

படம்: விமலாதித்தன் 
திருகோணமைலையின் வரலாறுகள் அடங்கிய கல்வெட்டுக்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து அவற்றை உரியவர்களைக் கொண்டு வாசித்து வெளியிடச் செய்து திருகோணமலையின் வரலாற்றை உறுதியான சான்றுகளுடன் எழுதுவற்கு மூலகாரணமாக திரு.நா.தம்பிராசா அவர்கள் 17-01-2013 அன்று காலமானார்

இவரைப்பற்றி வரலாற்றுத் திருகோணமலை மற்றும் காலனித்துவ திருகோணமலை ஆகிய நூல்களை எழுதிய கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின்குறிப்பு 

1970களுக்கு முன்னர் திருகோணமலையின் வரலாறு வெறும் நாட்டார் கதைகளினாலும் , புராணங்களினாலுமே கட்டப்பட்டிருந்தது. மிகப் பெரிய சோழர்களின் எழுச்சியினால் எழுதப்பட்டிருந்த இந்த மண்ணின் வரலாற்றுச் சித்திரங்கள் புதையுண்டு கிடந்தது. தொகுத்துப்பார்த்து ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை எமது இளைய தலைமுறைக்கு சொல்லமுடியாதளவிற்கு இந்த மண் குறித்த தொடர்ச்சியான அறிவு உருவாக்கப்படவில்லை. கல்வெட்டுக்கள் வாசிப்புக்கு உட்படுத்தப்படாமல் வெறும் கற்தூணாக சாய்ந்து கிடந்தன. விளிப்புணர்ச்சியின்றி சமூகம் அக்கறையற்று வாழ்ந்த காலத்தில் வரலாற்றைத் தேடிய ஒரு மனிதன் மதிப்பிற்குரிய நா.தம்பிராசா அண்ணர் அவர்கள்.

சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்ற அறிவே இல்லாத காலத்தில் சோழர்களை தேடி ஆராய்வதில் உறுதியான காரணங்களை தேடி அவர் ஆரம்பித்த பயணம்தான் இன்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்கின்றது.வரலாற்றாய்வு என்ற நீண்ட பயணத்தின் முதல் காலடி அவருக்குரியது. 

சோழர்கால திருகோணமலை நிர்வாக அமைப்பை புரிந்துகொள்வதற்கு திருகோணமலையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களே காரணமாக உள்ளன. திரு தம்பிராசா அண்ணர் அவர்கள் தனிமனிதனாக திருகோணமலை வரலாற்றுத் தடங்களை தேடிக் கண்டறிந்தார். பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை விரிவுரையாளராக பணியாற்றிய கலாநிதி செ.குணசிங்கம் அவர்கள் அவரது முதுநிலை பட்டத்திற்கான ஆய்வுத் தளமாக கோணேஸ்வரத்தை தேர்ந்தெடுத்திருந்தார். இது 1970களின் ஆரம்ப காலமாகும். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்தவாறு பல்கலைக்கழக வரலாற்றுத்துறைக்கு தேவையான ஆய்வுகளை திரு தம்பிராசா அண்ணர் செய்தார். அவரால் வெளிச்சம் பாய்ச்சப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்தே இலங்கையில் சோழர்கால ஆட்சி குறித்த வரலாற்றுச் சித்திரத்தை வரலாற்று ஆய்வாளர்களால் தீட்ட முடிந்ததது. அவற்றுள் கந்தளாய் விஸ்வநாதர் சிவன் கோயில் கல்வெட்டு, பெரிய குளம் கல்வெட்டு, மாங்கனாய் கல்வெட்டு, பளமொட்டைக் கல்வெட்டு, பத்திரகாளி அம்மன் கல்வெட்டு, நிலாவெளி பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலி கல்வெட்டு, தம்பலகாமம் ஐயனார் திடற்கல்வெட்டு, வில்லூன்றி கந்தசாமி கோயில் கல்வெட்டு என்பன முக்கியமானவை. கலாநிதி செ.குணசிங்கம், பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் கா.இந்திரபாலா ஆகியோர் என அவரது ஆதரவும் உதவியும் பெற்ற வரலாற்றுப் பேராசான்களின் பட்டியல் தொடரும். எனது "வராலாற்றுத் திருகோணமலை" தொடர்பான ஆய்வுகளை 2000 இன் ஆரம்பத்தில் செய்தபோது அவரது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. அவரது வரலாற்று ஆர்வம் அறிந்து ஆச்சரியப்பட்ட நிகழ்வுகள் அதிகம். இயல்பாகவே இந்த மண்ணை உயிர் மூச்சாக எண்ணிய அவரது பேச்சில் வீச்சாக வந்து விழும். ஒரு வரலாற்று ஆய்வாளனுக்குரிய கல்வி ஒழுக்கம் அவரிடம் நிரம்பியிருந்தது. அவர் வெளிச்சம் பாய்ச்சி வெளிஉலகிற்ற்கு தெரியப்படுத்திய கல்வெட்டுக்களில் கந்தளாய்க் கல்வெட்டு, மானாங்கேணிக் கல்வெட்டு, நிலாவெளிக் கல்வெட்டு என்பன மிகச் சிறப்பானவை. பத்தாம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் நிலாவெளிக் கல்வெட்டிலேயே "திருகோணமலை" என்ற சொல் முதன்முறையாக பயன்பட்டிருப்பதை அறிய முடிந்தது. திரு தம்பிராசா அண்ணர் அவர்கள் இது குறித்து மிக அடக்கத்தோடு பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். தான் வாழ்ந்த மண்ணின் மூலவேர்களை, அதன் மண்வாசனையை எதிர்கால சந்த்ததியினரும் தொட்டுணர்ந்து மகிழவேண்டும் என தன் இளமைக்காலத்தை அர்ப்பணித்த ஒரு வரலாற்றுப் பெருந்த்தகை. பேராசிரியர்கள் வரிசையில் நின்று எழுதப்படாமல் மண்ணில் புதைந்து கிடந்த திருகோணமலை வரலாற்று தடயங்களை தேடி ஒரு வரலாற்றைக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்கு காலத்தால் அழியாத புகழை அவருக்கு சேர்க்கும். மண் பயனுற வாழ்ந்த ஆசான் அவர்.


 திருகோணமலையின் வரலாற்றையும் இலங்கையில் சோழராட்சியின் வராலற்றில் முக்கால்வாசியையும் இலங்கையின் 10 தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையான காலத்தின் வரலாற்றை எழுத பேருதவி புரிந்த அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.. முன்னாள் சாம்பல்த் தீவு கிரோமதய சபைத்தலைவராக இருந்த அன்னாரின் உதவியால்த்தான் கலாநிதி.செ.குணசிங்கம், பேரா.கா.இந்திராபாலா, பேரா.பத்மநாதன் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியப்பட முடிந்தது.. வரலாற்றின் கடமையை தன்னால் இயன்ற அளவு செய்தவரை நாமும் நினைவில் வைத்திருப்போமாக



திரு.க.சரவணபவன் அவர்களின் குறிப்பு Sritharan Sam அவர்களின் முகநூல் பதிவிலிருந்து 

No comments:

Post a Comment