Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, August 27, 2014

மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமா க்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும்



இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அப்பா அம்மா சாயலில்த்தான் பிறக்கிறது. பேச்சுக் கூட தன் சூழலில் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் பேசிக்கொள்ளும்.
அப்படித்தான் சினிமாவும் யார் இயக்குகிறானோ அவன் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் அந்த படத்தில் இருக்கும்.அப்படி தன் சமுகத்தில் இருக்கும் ஒருவனின் வலியை பதிவு செய்து இருக்கிறார் மதிசுதா.
ஈழத்தில் இருந்து குறும்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தமிழ் நாட்டு காரர்கள் எடுக்கும் வணிக சினிமா போல சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மதி சுதா போன்ற சிலர்தான் அவர்களில் சமுகத்தின் சாயலில் படைப்புகளை தருகின்றனர்.
தழும்பு –ஒரு கை,கால்  இயலாத,  சமுகத்தில் வாழ நினைக்கும் முன்னாள் போராளியின் கதை,
படத்தின் முதல் காட்சியே ஒரு கை இயலாதவர் என்ற காட்சிப்படுத்தல் ஊடாக தொடங்குகிறது . இரண்டாவது காட்சியில் யுத்தத்திற்கு பிறகு நம்சமுகத்தின் நிலைமையையும் முன்னாள் போராளிகளை இந்த சமுகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்கிறது.
இப்படி காட்சிகள் மாற முன்னாள் போராளி என்பதால் பயத்தில் உதவி செய்ய மறுக்கும் நண்பனும் , சிகரட் தரவில்லை என்பதற்காக வக்கிலாதவன் என்று கேவலப்படுத்தும் சிறுவனை கோவப்பட்டு அடிப்பதும் , பிறகு சிறுவனின் அப்பா வந்து திட்டும் வார்த்தையும் அதன் பிறகான மனது கனத்த காட்சியில் படம் திரையில் மட்டும் மறைந்து போகும், நம் மனதில் இல்லை.
படத்தில் கொஞ்ச வசனம்தான் ஆனால் ஒவ்வொரு வசனமும் இன்னுமொரு படத்திற்கான கதை சொல்லி விடுகிறது.
உதரணமாக – இயக்கத்தில இருந்து வந்தவருக்கு  சமுகத்திண்ட நிலைப்பாடு விளங்காம இருக்கு.
செத்த சனத்திண்ட காச அடிச்சு கடைய போட்டுடுட்டு ஊர ஏமாத்தி பம்மாத்திய பிளைக்கிறாய், கொலைகார நாயே!
இந்த இரண்டு வசனங்களும் போதும் முன்னாள் போராளிகளை இன்றைய நிலைமையை சொல்ல.
அடுத்து பாலமுரளியின் ஒளிப்பதிவும் மதுரனின் படத்தொகுப்பும் குறைகள் சொல்ல முடியாது, முதல் காட்சியே ஒரு குறடும் சாவியும் இருக்கிற மாதிரி தொடங்கும், அத ஒரு ஒளிப்படமா பார்த்தாக்கூட நல்லா இருக்கும், தேத்தண்ணி குடிக்கிற காட்சி, பொடியன்கள அடிச்ச பிறகு ஒவ்வொரு சைக்கிளா விழுற காட்சி ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது.
சன்சிகன் ஒலிப்பதிவு தர்ஷனன் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு கைகொடுத்து இருக்கு.
இந்த படத்த பார்க்கும் போது இந்த கதைய எங்கயோ வாசிச்ச மாதிரி இருக்கே எண்டு ஜோசிச்சு கொண்டு இருந்தன். பிறகு படம் முடியும் போது அது நெற்கொழுந்து தாசனின் மூலக்கதையில் இருந்து எடுக்கப்பட்டது என்று போட்டுடாங்க.
அடுத்தது நடிப்பு -அந்த அந்த கதாபாத்திரங்கள் என்ன செய்யுமோ அத நடிச்ச ஆக்கள் செய்து இருகிறாங்க, மதிசுதாவும் அப்படிதான், கை,கால் ஏலாத ஒரு முன்னாள் போராளியாவே இருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் மதிசுதா தன்னுடைய வேலைய ஒழுங்கா செய்து இருக்கிறார் என்பதற்கு நான் மேலே சொன்ன காரணங்களே சாட்சி!
நான் மேல நிறைய இடத்தில முன்னாள் போராளி என்ற வார்த்தைய அதிகம் பயன்படுதிட்டன், உண்மை என்ன எண்டா இந்த சமுகத்தில் எப்படி வாழ்வது என்று இன்னும் போராடி கொண்டு இருக்கிறார்கள் இந்த முன்னாள் போராளிகள்!
முக்கியமா இந்த படத்த சமுக வலைதளங்களில் வீரம் பேசும் புலம்பெயர் போலிப் போராளிகளும், தமிழ்நாட்டு காரர்கள் மாதிரி படம் எடுக்க நினைக்கும் ஈழத்து முயல்வோரும் பார்த்தே ஆக வேண்டும்.

Monday, November 5, 2012

சாட்டை சாட்டைதான்


எந்த பாடசாலையும் , ஒரு மாணவனிடம்  உள்ள திறமையை தட்டிவிட்டு தலைநிமிர்த்துவதும் இல்லை, அப்படி தரைமட்டமாக்குவதும் ஒவ்வொரு ஆசிரியரின் கையில்தான் உள்ளது... என்ற கருத்தை அரசு பாடசாலையில்  பணிபுரியும் ஆசிரியர்களின் அணுகுமுறைகளை சாட்டையால் அடித்திருப்பதோடு, அதன் அவலநிலையையும் கலந்து எச்சரிக்கைமணியை ஓங்கி அடித்து எங்கள் பார்வைக்கு வந்துதான் சாட்டை.
ஐந்து பாடல்கள்,நான்கு சண்டை காட்சிகள் என மாசலாவை தூறி எமக்கு தரும் தமிழ் திரைத்துறை சில நல்ல படங்களை தராமலும் இருப்பதில்லை.
அவ்வாறன வரிசையில் இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில்  வந்ததுதான் சாட்டை என்ற கல்வி அரசியலை பேசும் படம். சில வருடங்களுக்கு முன் வந்த `பசங்கஎன்ற படம் பேசப்படாத பாடசாலை மாணவர்கள் பிரச்சனையை மெதுவாக பேசியது அப்படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது.ஆனால் பசங்க படத்தில் பேசாமல் விடப்பட்ட கல்வி அரசியலை இந்தப் படம் காரசாரமாக பேசியிருக்கிறது.
பாடசாலை கல்வியை வியாபாரமாக்கிவிட்ட சூழலில் அரசுப் பள்ளிகளில் இன்று நடக்கும் அவலம் அப்படியே இயக்குனர் அகத்தியனின் பட்டறையிலிருந்து வந்தத  இயக்குனர் அன்பழகனால் தோலுரிக்கப்பட்டுள்ளது
தனது முதல் படத்திலே ஒரு மிக முக்கியமான அரசியலை பேசும் படத்தைச் சமரசங்களின்றி இயக்கியிருக்கும் அன்பழகனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
தூக்கி எறியும் சண்டை காட்சிகளோ நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் சேர்ந்து ஆடும் பாடல் கட்சிகளோ எதுவும் இல்லாத சந்தர்பத்தில் அதிகமான பாடசாலை காட்சிகளில் தன் உச்ச திறமையை காட்டி சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன், பள்ளிக்குள்ளே சுற்றிவருகிற ஒளிப்படக்கருவி எந்த நெருடலும் இல்லாமல் நம்மையும் அங்கு கூட்டிச்சென்று விடுகிறது.
நல்லாசிரியருக்கான அத்தனை தகுதியும் கொண்ட ஆசிரியராகச் தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நன்றாக வாழ்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் கடைசியாக நடித்த ஈசன் பட  காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை போல.. எந்நேரமும் முகத்தை விறைப்பாகவே வைத்திருகிறார்.விறைப்பை கொஞ்சம்  குறைத்திருக்கலாம்.. மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர் நடந்துகொள்ளும் விதம், அனைவரும் தன்னைத் தாக்கும்போதும் தன்னுடைய மாணவிக்காக அடிவாங்கிக்கொள்ளும் குணம், எந்த சூழலிலும் மாணவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவது என ஒரு உண்மையான ஆசிரியராக வாழ்ந்திருக்கிறார்.
தம்பி ராமையா.. படத்தின் இன்னுமொரு கதாநாயகன் கதையின் வில்லனாக நக்கலுடன் மிரட்டி இருக்கிறார். வில்லத்தனமான ஆசிரியராக பிரித்து மேய்ந்து விடுகிறார்.
...முடியை ஒதுக்கி விட்டு வழுக்கை தலையில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே ரணகளம் பண்ணியிருக்கிறார். சொல்லப்போனால் படம் விறுவிறுப்பாகப் போவது தம்பி ராமையாவின் சேட்டைகளால் தான்.
படத்தின் சுவாரஸ்யங்கள்...
முதல் காட்சியில் உந்துருளியில் வரும் சமுத்திரகனி நம்மவர் கமலை நினைவு படுத்துகிறார் . முக்கியமாக பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும் காட்சிகளில் நமக்கு பிடித்த ஒரு  ஆசிரியராக நம் கண் முன் நிற்கின்றார்.

வேக வாசிப்பு பயிற்சி , நினைவு அதிகரிக்கும் பயிற்சி, தோப்ப்புக்கரணம் போட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்  என்பது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும்  காட்சிகள் சுவாரஸ்யம்.
முக்கியமாக பெண்கள் கழிவறையை எப்படி இருக்கு என்று எட்டி பார்த்து தண்டனை அனுபவிக்கும்  மாணவனை பாராட்டி பேசும் காட்சிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
வெகு நாட்களுக்கு பிறகு ஜுனியர் பாலைய்யா..... பாடசாலை அதிபராக நடித்து இருக்கின்றார்.. அவர் தம்பிராமய்யாவின் அதட்டல் உருட்டலுக்கு  பயப்படும் இடங்களில் கலக்கி இருக்கிறார்.
தம்பிராமய்யா வரும் அனைத்து காட்சிகளும் சுவாரசியம்தான்.
பிளாக் பாண்டி, யுவன், சதிஷ் மகிமா போன்றவர்கள் மாணவர்களுக்கான பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..
இமானின் இசை படத்துக்கு பெரிய பலம்..
பாடசாலை ஆசிரியர்கள் செய்யும் கல்வி அரசியலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இருந்த ஏக்கங்கள் கோபங்கள் அனைத்தையும் இந்தப் படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் பிரமாதம்.. கேவலமான கல்வி அரசியலை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.ஆனாலும் வீரியம் குறைந்து விடவில்லை.
.அன்பழகன் கூர்மையான வசனங்கள் படத்திற்கு இன்னுமொரு பலம் ஏணியை கூரை மேல போடாதீங்க, வானத்தை நோக்கிப் போடுங்க...என்ற ஒரு வசனமே போதும் இயக்குனரின் தரத்தைச் சொல்ல..
இன்றைய காலத்திற்க்குத் தேவையான கதை, சில அரசுபாடசாலைகளின்  நிலைமை, நல்ல ஆசிரியருக்கான அடையாளம் என்ன? என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளதால் நிச்சயம் பாராட்டப் படவேண்டிய, அதே சமயம் பார்க்கவேண்டிய படம்...!
.இந்த படத்தை  மாணவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அனைத்து கட்டாயம் ஆசிரியர்களும், கல்வி வியாபாரிகளும் பார்த்தாக வேண்டும், .